இந்த வருடம் மார்கழி அத்தனை குளிரில்லை வேர்க்க ஆரம்பிச்சாச்சி கொஞ்சம் நேரம் தெருவிளக்கில் உட்கார ஆசை வர வாசலில் வந்து உட்கார மணி பதினொன்னை நெருங்க இருந்தது.எப்பவும் போல அமைதியை வாசித்துக் கொண்டிருந்தது இரவு பனிபொழிய மறந்த மார்கழி நிலவு ஏதோ சொல்ல கோபத்தில்
கலைந்து ஓடிக்கொண்டிருந்தது மேகங்கள்...மேகத்துக்கு துணையாய் காற்று வீச மறுத்து மரங்கள்!!!
வாசலில் வந்து உட்கார மூன்று வீடு தள்ளி உட்கார்ந்திருந்த அந்த தெரு நாய் என்னைக் கண்டதும் ஓடி வந்து வாலாட்டுகிறது கூடவே இடுப்பையும் சற்று நேரம் ஓய்ந்து என்னருகில் உட்கார்ந்து முகத்தை அந்த பக்கம் திருப்பிக் கொண்டு நாக்கை தொங்கவிட்டுக் கொண்டு வாலாட்டிக் கொண்டே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தது..தெருக்கோடியிலோ அல்லது வேறு தெருவிலோ வேறு நாய்கள் குறைக்கும் சத்தம் கேட்டால் தன் பங்குக்கு தானும் உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு சொல்லி கொஞ்சம் வீரம் வந்தால் குறைத்தும் தன் பிறவிப் பயனை செய்த வண்ணமிருந்தது..!!
வெள்ளை நிறத்தில் வெளிர் பிரவுன் கலந்து கொஞ்சமாய் சதையோடு எலும்பு தெரிய இருந்தது..இரவில் போடும் சோறுக்கு விஸ்வாசம் காட்டத்தவறுவதில்லை இது நாங்கள் இங்கு வந்து இதற்கு உணவளிக்க ஆரம்பித்த நாளிலிருந்து..!! நாக்கு தொங்க வாலையாட்டிக் கொண்டிருந்த அதை பார்த்து கொண்டிருந்த எனக்கு கொஞ்சமாய் ஒன்றுகிறது அதன் இயல்போடு மனசு..என்ன இது வாலாட்டுது நான் தலையாட்டறேன் இதானே எனக்கு இதுக்கும் வித்தியாசம்!! விந்தையாய் தெரிகிறேன் நான் எனக்கே!! எதற்கப்படி இருக்கிறேன் எதிர்த்து மறுத்து எதிர்க்கருத்து சொல்ல நான் எப்போதும் மறுப்பதேன்? விட்டுக் கொடுத்து விட்டு கொடுத்து நான் சாதித்தது என்ன? இந்த நாயாவது தலை நிமிர்த்தி குறைக்கிறது!! நான்?
இப்படி யோசிச்சிகிட்டே காலை மடக்கி கைகளால் கால்களை அணைத்து தலையை கால்கள் மேல் சாய்த்து நிலத்தை கவனிக்க என்னை கடுப்பேத்தவே என் நிழல்.எரிச்சலாய் வந்தது எனக்கு.. நான் ஏதோ தனியா இருக்கலாமுன்னு வந்தா கூடவே வந்துட்டியான்னு தலையை தூக்கி கைகளை விடுவித்து ஒரு காலால் நிழலை தேய்த்து மிதிக்கிறேன்..என் அறியாமையின் வெளிப்பாடு. எனக்கு தெரிகிறது அர்த்தமற்ற செயல் என!! வெற்று காலால் நிலத்தை தேய்க்க லேசா எரிந்தது பாதம்!! இன்னும் அந்த நாய் அந்த பக்கம் பார்த்தவாறே எனக்கு துணையாய் இருப்பது போல் வாலாட்டிக் கொண்டு...
இப்ப நினைவு நாயின் பக்கம்.. நடப்பதை அப்படியே ஏற்றுக் கொண்டாக வேண்டிய பிறவி. நடுத்தெருவில் சோறு, சுகம், பிரசவம், சண்டை, சாவு..பசித்தாலும் தாகமுன்னாலும் என்ன பண்ணும் பாவம். பிறவிகள் கூட ஒரு கொடுப்பினை தான். இதுவும் கலவி கொண்டு குட்டி போட்டு பால் கொடுத்து முடிந்த வரை அவற்றை தன் கண்காணிப்பில் வைத்து அவை விட்டுச் சென்றதை பற்றி வருத்த பட தெரியாத நிலை.. மனித வாழ்வில் இதை ஓப்பிடும் போது தேவலாமுன்னு தோணுது, ஐந்தறிவு கொடுத்தமைக்கு அவை நன்றி சொல்லவேண்டும் அப்பிறவிக்கு..ஆசை, கோபம், பொறாமை, தேவை, தேடல், போதாமை,வசதி இப்படி எதுவும் தேடாத அப்பிறவி சுகமாய் தோன்றியது அக்கணம்..சாலையில் நசுங்கி சிதறி கிடந்த நாய்கள் எல்லாம் நினைவில் வந்து போனது!!
தெருவில் உக்கார்ந்து நீ ஞானியாக போறதில்லை போய் படுன்னு தீடீரென்று எனக்குள் இருந்த மிருகம் சொல்ல..இப்ப வெளியேயும் புழுக்கம்!!!
-- 



7 comments:
:(((
தெருவில் உக்கார்ந்து நீ ஞானியாக போறதில்லை போய் படுன்னு தீடீரென்று எனக்குள் இருந்த மிருகம் சொல்ல..இப்ப வெளியேயும் புழுக்கம்!!!
///
mmm
எல்லோர்க்குள்ளும் ஒரு மிருகம் இருக்கத்தான் செய்கிறது ...
அதுவும் ஒரு உயிர்.நீங்கள் நினைப்பதை அப்படியே மாற்றிப்போட்டு நினைக்கும்தானே தமிழ் !
ரெண்டு நாளைக்கு முன்ன தான் நானும் ஒரு நாயுடன் பேசிக்கொண்டிருந்தேன்.
துரோகம் செய்ய நினைக்காத நட்பை அதனிடம் காண முடியும்.
:))))
நாயைப் பற்றி நானும் அதிகமாக நினைப்பேன்! எப்போ தெரியுமா? அது என்னை கடிக்க வரும்போது!
Post a Comment