அதீதத்தில் எழுதியது
தாய்மை தருவதும் பெறுவதும் சுகம்…வரம்... உலகம் அறிந்த இந்த நியதியை இனி சொல்வது தேவையற்ற ஒன்றே எனினும் சில பகிர்தல் சுகமும் தெளிவும் தரும் என்ற நம்பிக்கையில் இந்த கட்டுரை.
தாய்மை… இதை கொண்டாடுவது தாய்மைக்கு நாம் செய்யும் கடமை மட்டுமே. இதற்கு ஈடென எதுவுமில்லை. தாய்மை தரும் நேர்த்தி முதலில் பொறுமை, அமைதி, அன்பு, கனிவு, அரவணைப்பு. இதை நமக்கு தருவது பெரும்பாலும் தொடுதலின் வழியே தான். குழந்தைக்குப் பாலுட்டும் போது, அதை ரசித்து உச்சி மோந்து, குழந்தையின் கையை மெல்ல எடுத்து இதமாய் முத்தமிட்டுக் கொண்டே பாலுட்டும் சுகம் அலாதி. அதை தூங்கச் செய்து தொட்டிலில் இட்டு மெதுவாய் தொட்டிலாட்டி மெதுவாய் நடப்பாள், குழந்தை எழா வண்ணம்.
அழுதுக் கொண்டே வரும் குழந்தையை, “அச்சச்சோ… என்ன ஆச்சி? ஏன் தங்கம் அழுவுது?” ன்னு கேட்டுகிட்டே கண்ணீர் துடைச்சி, “நம்ம அடிச்சிடலாம்… சரியா”ன்னு சொல்லும் போது, அவள் அங்கே அந்த குழந்தைக்கு முதல் தோழியாகிறாள். பள்ளிப்பருவம் எட்டுகையில், எங்கே “அ” சொல்லு… அ…. “அட, சரியா சொல்லிட்டியே” சமத்து… என் கண்ணு… ன்னு முத்தமிட்டு முதல் ஆசிரியை ஆவாள் தாய். இப்படி ஒரு குழந்தையின் ஒவ்வொரு பரிமாணத்தின் போதும் அதற்கேற்ற வண்ணம் தன்னை மாற்றிக் கொள்வாள் அவள். அந்த குழந்தையை அரவணைக்கும் போது, முத்தமிடும் போது, கட்டியணைத்து உறங்கும் போது, அழும் குழந்தையின் கண்களை துடைக்கும் போது, ஆதரவாய் தோள் சாய்த்துக் கொள்ளும் போது தாயின் ஸ்பரிசம் அந்த குழந்தைக்கு உணர்த்தப்படுகிறது. அந்த தொடுதல் தரும் நிவர்த்தி தான் அந்த குழந்தையின் அத்தனை மாற்றங்களுக்கும், தேற்றுதலுக்கும் தாய்மை.
இந்த தொடுதலை, தொட்டு உணர்த்தலை, இப்போது நாம் சரிவர நம் குழந்தைகளுக்கு தருகிறோமா? என்பது கேள்வி. தற்போது நாகரீக வளர்ச்சியில் பெரும்பாலும் குழந்தைகள் தாயின் கைகளில் தவழ்ந்து வளர்வதில்லை. வீட்டில் இருந்தால் குஷன் மெத்தை, வெளியே கொண்டு சென்றால் ஒரு குஷன் மெத்தை, என மெத்தையில் குழந்தையைக் கிடத்தி, அதை மூன்று பக்கமும் சேர்த்து, மேல் பக்கம் தலை மட்டும் தெரிய கைகளில் ஏந்திச் செல்வது. குழந்தை சற்று வளர்ந்தவுடன் மார்டன் நடைவண்டி. வாக்கர் எனப்படும் அதில், குழந்தை சிறையுண்டு கிடக்கும். தரையில் விட்டால் ஜல தோஷம், எல்லாத்தையும் எடுத்து போட்டு உடைக்குதுன்னு பெருமை. சீறு நீர் கழிக்க நேப்பிபேட் எனப்படும் காற்று புகா பஞ்சட்டை. எல்லாவற்றுக்கும் மேலாய், இதற்கெல்லாம் சொல்லும் காரணம்… சுகாதாரம். நம்மில் எத்தனை பேர், பாத்திரத்தில் பருப்பும் நெய்யும், அல்லது சூடான ரசம் சாதத்தை குழைத்து நேரத்துக்கு குழந்தைக்குத் தருகிறோம் இப்போது. ஒரு நாள் விட்டு ஒரு நாள், வேப்பிலை கொழுந்து, சீரகம், ஒரு மிளகு, துளி பூண்டு, சிட்டிகை மஞ்சள் தூள் என அரைத்து வெள்ளை மல்லு துணியிலிட்டு பாலாடையில் தாய்பாலில் ஊற வைத்து, குளிப்பாட்டும் போது இதை குழந்தைக்கு குடிக்கச் செய்கிறோமா?
எல்லாம் மருத்துவர் அட்வைஸ், நின்றால், நடந்தால், எழுந்தால், படுத்தால்... நம் மூத்தோர் எதை சொன்னாலும், “அது அந்த காலம்… டாக்டர், நோ சொன்னார்” என்பது தான். ப்ளாஸ்டிக் கிண்ணம் அல்லது கண்ணாடி பாத்திரத்தில் மிக்ஸியில் இட்ட சாதமோ வேக வைத்த காய்கறிகளையோ போட்டு ஸ்பூனால் புகட்டுவது மார்டன் தாய்மார்கள் கைவண்ணம். இதனால், அந்த குழந்தைக்குத் தொடு உணர்வால் தாய்மை தரப்படுவதேயில்லை. தூங்கச் செய்வதும் ஸ்பிரிங் போட்ட தொட்டில். மடியில் தூங்கச் செய்து துணியில் தொட்டில் கட்டுவதெல்லாம் இயலதென்பர் அடிக்குமாடி நாகரீகம் அண்டை வீட்டார் பெருமை பேச அன்றாடம் மாறிக் கொண்டு தான்வருகிறது இந்த குழந்தை வளர்ப்பு..
இதில் கொடுமை கைக்குழந்தைகளை வெளியே செல்லும் போது கிட்ட தட்ட பொட்டலம் கட்டி கையில் ஏந்தி செல்வது. யோசித்து பாருங்கள், ஏந்தி செல்வதற்கும் அணைத்து செல்வதற்கும் உள்ள வேறுபாட்டை. அரவணைத்துக் கொண்டுச் சென்று தாயின் ஸ்பரிசத்தையும் மார்பின் சூட்டையும் குழந்தை அனுபவிப்பதென்பது என்ற ஒன்றே இல்லை என்றாகிவிட்டது தற்காலத்தில். குழந்தையை பொட்டலமா கொண்டு செல்பவர்களைப் பார்த்தால், இதை சொல்வதற்கு தயக்கமாகவும் கஷ்டமாகவும் இருந்தாலும் கூட, அப்படி கொண்டு செல்வது இறந்த குழந்தையை சுற்றி கையில் கொண்டு செல்வது போல் தான் இருக்கிறது. ஸ்பரிசம் தீண்ட தாருங்கள். இந்த காட்சி பெரும்பாலும் மருத்துவமனைக்கு வருபவர்களிடம் காணலாம். உடல் நலமில்லா குழந்தைகளுக்குத், தாயின் கைதீண்டல் தரும் அரவணைப்பே பெரிய மருந்து. அதை விடுத்து, அந்த குஷன் படுக்கை இயற்கையாகவே உஷண குணம் கொண்டவை அதில் கட்டி வைத்து இயற்கைக் காற்றுக்கு அப்பாற்படுத்துவதும் வருந்தத்தக்கதே.. நல்ல பருத்தி துணிகளில் குழந்தைகளை படுக்கவைக்கலாம். வெளியே செல்லும் போதும் இப்படி கொண்டு போகலாம். வரம்பற்ற நாகரீக மோகத்தில் விதையைச் சரியாய் நட தவறுவதாய் தான் இதை நான் நினைக்கிறேன்.
குழந்தை வளர்ப்பு, கலையல்ல… காதல்.! அதை எல்லா தாயும், விரும்பி, நேசித்து தன்னை வருத்தித் தான் செய்கிறாள். ஆனால், “அவ புள்ளைக்கு அத வாங்கி இருக்கா… நாமும் இவ மாதிரியே அடுத்த மாசம் வாங்கனும்” என்ற தான் தோன்றி தனங்களை குழந்தைவளர்ப்பில் ஈடுபடுத்த வேண்டாம். இயல்பாய், இயற்கையாய் வளர விடுங்கள். குழந்தைகளை வளர்ப்பதில், எல்லாவற்றிற்கும் வியாக்கியாணம் பேசுதல் வீண். தாய்மை தந்தால் போதாது… உங்கள் ஸ்பரிசத்தை கொடுங்கள். உங்கள் தொடுதல், குழந்தைகளுக்கு மிகவும் அவசியம். தூக்கி வச்சி, பழக்கம் பண்ணா அழுதுகிட்டே இருப்பான் என்பதெல்லாம் கதை. தூக்கி வச்சி வளர்க்கலாம். அது நடைபழகிய பின், நாம் ஆசைப்பட்டாலும் நாம் தூக்கி வச்சிப்பதை குழந்தை விரும்பாது. உங்கள் தீண்டல், தொடுதல், உணர்த்துதல், உங்கள் கை சூடு தான் குழந்தைக்கு மிகப்பெரிய மருந்து… ஊட்டம்… ஊக்கம்... எல்லாம்.
தொடுதல் தரும் ஆறுதல்… இதற்கு இணை உலகத்தில் வேறெதுவுமில்லை.


5 comments:
ஒரு வருத்தமான உண்மை என்னவென்றால் குழந்தைகளை நிறைய தாய்மார்களுக்கு தூக்க தெரியவில்லை என்பதே. நன்றாக எழுதி இருக்கிறிர்கள் ஆனால் யார் எடுத்து கொள்ள போகிறார்கள்.
குழந்தை பராமரிப்பு என்பது சொல்லித் தருவதல்ல.அது தாய்மை ஊற்று.அதீதத்தில் வாசித்தேன் தமிழ்.வாழ்த்துகள் !
kauvil kulanthaigalai kollum pengalai enna seivathu tamil?
ஒரு பொம்மை வாங்குவது போல பெற்று போட்டு விட்டு பொய் விடுகிறார்கள் என்ன செய்வது . புரிந்து கொள்வார்களா ?
//குழந்தை வளர்ப்பு, கலையல்ல… காதல்.! //
அபாரம் தமிழ் :)
Post a Comment