ஜெயா
ஜெயா எங்க வீட்டு எதிரில் குடி தண்ணீர் குழாயில் தண்ணீர் பிடிக்க வருபவர்களில் ஒருத்தி.வயது சுமார் நாற்பதுகளில் நல்ல உயரம் முடி பெரும் பாலும் நரைத்திருக்கும் .கணவனை இழந்தவள் பிள்ளைகள் கிடையாது.. நான் குடியிருந்த வீட்டில் முன்னால் ஒரு பக்கம் ரோஜா தோட்டமும் அடுத்த பக்கம் குரோட்டன்ஸ் மற்றும் மற்ற வகை மலர்ச் செடிகளும் இரு பக்கம் புங்கமரமும் வைத்திருந்தேன். ஜெயா தண்ணீர் பிடிக்க வரும் போதெல்லாம் சில நாட்கள் காம்பவுண்ட் அந்த பக்கம் இருந்து ரோஜா மற்றும் வேறு சில மலரை பறித்துப்போவாள் இது ஜெயா மட்டுமல்ல பெரும்பாலானோர் செய்வார்கள் வீட்டில் யாராவது வெளியே இருந்தால் கேட்டு பறிப்பதை போல் பறித்து போவாங்க...
இப்படி இருக்கையில் ஒரு நாள் ஜெயா குடம் இல்லாமல் வீட்டினுள் நுழைந்து பூவை பறிக்க எனக்கு கோவம் உடனே அவளை திட்ட போக பக்கத்து வீட்டுக்கார சாந்தா அக்கா அவளை ஒன்னும் சொல்லாதீங்க கிட்ட போகதீங்க அவளுக்கு பைத்தியம் பிடிச்சிருக்குன்னு பாவம் திடீர்ன்னு இப்படியாயிட்டான்னு சொல்ல
ஒரு நொடி அதிர்ச்சியாய் இருந்தது.சுதாரிக்கவே முடியவில்லை பிரம்மை பிடிச்ச மாதிரி நான். பாவம் ஒரு குடம் தண்ணீருக்கு தான் வருவா ஜெயா அது கூட அவ முறை வரும் வரை சும்மா தான் நிப்பாள் யாரிடமும் சண்டை போடமாட்டாள் அவசரமுன்னா பாந்தமாய் கேட்டு முன்னாடி பிடிச்சிட்டு போவா இல்லைன்னா காத்திருப்பாள்.
ஏன் நல்லாதானா இருந்தா என்ன ஆச்சி எப்பலேர்ந்து இப்படின்னு மனசில் எழுந்த கேள்விகளை அடக்கமாட்டாமல் சாந்தா அக்காவிடம் கேட்கிறேன் எல்லா கேள்வியையும்..சாந்தா அக்காவுக்கும் பொழுது போகனும் அப்பறம் க்தை சொல்லும் ஆர்வமும் மேலோங்க பாவம் அவ சொத்தையெல்லாம் அவ்ஙக மச்சினனோ மாமாவோ ஏமாத்திட்டதா சொன்னாங்க..சரி சொத்து போனால் பைத்தியம் ஆவாங்களா புரியவில்லை எனக்கு.பாவம் சரியா சாப்பாடு கிடையாது அதை கேட்கப்போன அவளுக்கு சூன்யம் வச்சிட்டாங்க இப்ப இவ வீட்டில் இருப்பதில்லை இப்படி தான் எங்க பூவை பார்த்தாலும் பறிச்சுக்குவா இனிமேல் நீ புடவையெல்லாம் வெளியே காயப் போடாதே அவளுக்கு பூ புடவை பைத்தியம் அப்படின்னு பைத்தியத்துக்கு பைத்தியம் பிடித்ததும் பிடித்த விஷயங்கள் மேல் பைத்தியமாம்..ஒன்னும் புரியலை எனக்கு..ஏமாற்றத்தின் வெளிப்பாடு மன நிலை பிறழ்வா? அத்தனை அதிர்ச்சியா? சொத்துக்களை இழப்பது? இவளுக்கு என்ன தனி ஒருத்தி தானே எப்படியாவது வாழ்ந்திருக்கலாமே? புருஷனுமில்லை பிள்ளைகளும் இல்லை அவ்வளவு ஆசையா சொத்து மேல் என இப்படி எனக்குள் ஒரு மிகச் சராசரிக்கான எல்லா கேள்விகளும் எழ ஜெயா பற்றிய எண்ணங்கள் என்னை என்னவோ செய்ய தவறவில்லை அன்று முதல்..ஆமாம் அடிக்கடிஜெயா வர ஆரம்பிச்சா என் வீட்டுக்கு...
ஜெயா வருவதும் பூவை பறிச்சி தலையில் வச்சிப்பதும் புடவை காயப்போட்டிருந்தால் எடுத்து சுத்திக் கொள்வதும் அதை கொடுக்க அவளிடம் மெதுவாக பேச ஆரம்பிக்க வேண்டியதுமாய் ஜெயா எனக்கு மெதுவாய் பழக தொடங்கி இருந்தாள்..அக்கா நான் இந்த பூவை கிள்ளிக்கிறேன்ன்னு சொல்லுவா நான் வெளியே இருந்தா..புடவை எடுத்து சுத்திக்குவா கேட்டால் இது என்னோடதுன்னு சொல்லுவா? நானும் பாவமுன்னு ஒரு நாளும் விட்டுக் கொடுக்காமல் வேற தரேன் கொடுன்னு சொல்லியோ மெதுவா அதட்டியோ வாங்கிடுவேன்..ஆனால் தவறாமல் ஜெயாவுக்கு சாப்பாடும் தண்ணீரும் தர ஆரம்பிச்சேன்..எனக்கு பணிய தொடங்கினாள் ஜெயா..
இப்ப எல்லாம் யார் வீட்டில் ஜெயா நுழைந்தாலும் கொஞ்ச வாங்க நீங்க சொன்னா ஜெயா கேப்பான்னு சொல்லும் அளவு என்னை ஜெயாவுக்கு பிடிக்க ஆரம்பிச்சிடுச்சி ஆனால் கண்டிஷன் போடுவா தருவல்ல நீ அப்படின்னு..எப்பவும் சாப்பாடு தண்ணீர் சில நாள் இலையில் சாப்பாடும் சொம்பில் தண்ணியும் கொடுப்பேன் பசிச்சா சுத்தமா சாப்பிட்டுவிட்டு ஒழுக ஒழுக குடிப்பா த்ண்ணியை சேலை அப்படியே நனைந்து வடியும். பசி இல்லாத போது இலையோடு சாதத்தை மடிச்சி மடியில் வச்சிப்பா..தட்டில் கொடுத்தால் பசிக்காத போது தட்டோடு விட்டுட்டு போயிடுவாள்..ஒரு நாள் பார்த்த ஜெயா மொட்டை அடிச்சிருந்தா, எப்படி ஏன்னு கேட்டபோது நிறைய பேன் ஆயிடுச்சி பாவம் சொறிஞ்சிகிட்டே இருந்தா அதான் அந்த கடைக்காரர் ஆளை வரவச்சி மொட்டை அடிச்சிட்டாருன்னு சொன்னாங்க.இப்படி பலருக்கும் ஜெயா பிடிச்சவளா ஆயிட்டா நாளாடைவில்..அதே மாதிரி மொட்டை அடிச்சி முடியும் வளரத் தொடங்கிவிட்டது ஜெயாவுக்கு..
பல சமயம் நடு ரோட்டில் உட்கார்ந்து அடம் பண்ணுவா வரமாட்டேன்னு போற வர வண்டியெல்லாம் அவளை சுத்திட்டு போகும் சிலர் ஷடன் பிரேக் அடிச்சி நிக்கும் பலர் திட்டிட்டு போவாஙக சிலர் திரும்பி பார்த்து உச் கொட்டிட்டு போவாங்க.. நான் வெகு சில நேரம் மட்டுமே அவளை அந்த மாதிரி நேரத்தில் அழைத்திருக்கேன்.பெரும்பாலும் வரமாட்டா .அப்ப எல்லாரும் சொல்வாங்க அமாவசை வரப்போதில்லை அதான்னு பல நேரம் இன்னைக்கு அமாவாசையில்லை அதான் நீ கிட்ட போகாத ஒரு நேரம் மாதிரி இருக்காதுன்னும் சொல்வாங்க. நானும் பயப்படுவேன்.ஏன்னா இப்ப எல்லாம் ஜெயா தன் மேல் ஆடைகளை வைத்துக் கொள்வதில்லை பெரும் பாலான நேரம்.
நல்ல வெள்ளையா இருப்பா அவ கால்களும் கிழிந்த ஜாக்கெட்டில் மார்பகங்களும் நடுவீதியில் வெற்றாய் இருக்கும் போது நானே ஜெயாவா இருப்பது மாதிரி கற்பம் கலங்கும் பெண்ணானவள் தன்னை ஒரு ஆண் சமைக்கவும் ஒழுக்கம் கருதியும் தன்னை பொத்தி பொத்தி காப்பாத்திக்குவா அதே நேரம் சூழலும் கட்டாயம் வேறு சில காரணங்களை பெண்ணை வேறு நிலைக்கு ஆட்பட வச்சாலும் அது நான்கு சுவருக்கு மத்தியில்..எல்லாருக்கும் கஷ்டமா இருக்கும் அவளை யாரும் வக்கிர பார்வையில் பார்க்க மாட்டாங்கன்னு தெரிஞ்சாலும் பெண் என்பதால் எனக்கு உயிர் வலிக்கும்.பலர் அவளுக்கு உடைகளை போர்த்தி விட்டாளும் அவ அதை வச்சிக்கமாட்டாள்..தார் ரோடு வெய்யிலுக்கு தெரியவில்லை அவளுக்கு சுடுமுன்னு அப்படியே தகிச்சி எடுக்கும் ஜெயாவை.அவளா எழுந்து வரும் வரை யாராலும் ஜெயாவை அங்கிருந்து நகர்த்த முடிந்ததில்லை..அவளுக்கு அதன் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்க எனக்கும் ஜெயாவை நெருங்க பயம் தோன்ற ஆரம்பித்தது.ஆனாலும் ஒரு நாளும் அவ அழுக்கா இருக்கான்னோ அசிங்கம் பண்ணுவான்னு நான் அருவெறுத்ததில்லை.ஏனோ எனக்கு அது பொருட்டா தெரியலை..
எப்ப வெளியே வந்தாலும் ஜெயா உட்காரும் கடைவாசல் நடு ரோடு என் வீட்டு படிக்கட்டு எதிர் சந்து என கண்கள் அனிச்சையாய் அவளை தேடும் அன்று அவளை எங்கும் காணாததால் வெளியே சென்று ரோட்டின் இரு பக்கமும் தேட ஆரம்பிக்க கடைக்காரர் வந்து சொன்னார் ஜெயா செத்துப்போச்சுன்னு..அவ பைத்தியமாயிட்டான்னு சொன்ன போது வந்த அதே தடுமாற்றம் ஒரு முறை உயிரை உலுக்கிப்போட்டுடுச்சி..ஒருத்தர் ஆம்புலன்ஸ்ல எடுத்து போயிட்டாங்கன்னு சொல்ல இன்னொருவர் 108ல் கொண்டு போயிட்டாங்கன்னு சொல்ல மெதுவா மனசை பயம் கிள்ள ஆரம்பிச்சிடுச்சி.ஜெயாவுக்கு என்ன ஆகியிருக்கும் ஒருவேளை ஏதாவது மருத்துவ மனையில் சேர்த்திருப்பாங்களோன்னு..விடாமல் அலைந்து திரிந்து தகவல் சேகரித்ததில் தெரிந்தது ஜெயா செத்து தான் போயிருந்தாள் இதையெல்லாம் அமைதியாய் வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருந்தனர் அவள் சொத்துக்களை அபகரித்த அவள் உறவுக்காரர்கள். கடைசியா அவ உடலை கூட வாங்க அவங்க முன்வரலையாம்..முடிந்து போயிருந்தாள் ஜேயா..
இருந்தாலும் சில மாதங்கள் வெற்றிடமாய் இருந்தது அவள் கடைசியாய் வாழ்ந்திருந்த இடங்கள் ஊனமாய் மாறியிருந்தது .காரணமில்லாமல் ஜெயாவை பிடித்திருந்தது எனக்கு.
இன்னும் பூத்துக் கொண்டிருக்கிறது ஜெயாவுக்கு அஞ்சலி சொல்ல வீட்டில் மலர்கள் இன்னும் அவளுக்கான ஒரு குடம் தண்ணீர் வந்துக் கொண்டிருக்கிறது உப்புக்கண்ணீராய், இன்னும் உருக்கிக் கொண்டிருக்கிறான் சூரியன் அவள் உட்கார்ந்திருந்த தார் ரோட்டை ,ஜெயா என்னதுன்னு எடுத்துக் கொண்ட புடவை இன்னும் கிழியவில்லை என்னை நிர்வாணமாய் பார்த்துக் கொண்டிருக்கிறது அது..ஜெயா பங்கு இட்லியும் மதிய உணவும் ஒரு சொம்பு த்ண்ணீரும் அன்றாடம் மீதமாய் இருக்கிறது ஆனால் மெதுவாய் மறந்து விட்டிருந்தேன் நான் ஜெயாவை.....
துரோகங்களையும் நிராகரிப்புகளையும் தாங்கும் இதயம் எல்லா மனிதர்களுக்கும் இருப்பதில்லை அந்த அதிர்ச்சி தான் இப்படி ஜெயாக்களை உருவாக்க காரணமோ..இயற்கையாய் ஒருவர் இன்னிலையில் பிறந்திருந்தால் அது வேறு..மனிதர்களே மரணம் என்ற ஒன்று இன்றும் இனியும் பொதுவில் தான் வைக்கப்பட்டிருக்கிறது இதை உணர்ந்தால் ஜெயாக்களின் எண்ணிக்கை குறையும் குறைப்போம்......... ஜெயா இன்னும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறாள்
- 



8 comments:
மனிதர்களே மரணம் என்ற ஒன்று இன்றும் இனியும் பொதுவில் தான் வைக்கப்பட்டிருக்கிறது இதை உணர்ந்தால் ஜெயாக்களின் எண்ணிக்கை குறையும் குறைப்போம்]]
உண்மைதான் ...
ஜெயா! மனம் கனத்த பதிவு!
படிச்சிட்டு ரொம்ப் வருத்தமாக இருக்கு
அருமை,
படித்ததும் மனதில் ஏனோ கனம்...
புனைவு..? என்ற வகையிலேயே அந்த பெண்ணின் மரணம் வலிக்க செய்கிறது..!
ஆனால்..! நிஜத்தில் இதே போன்ற அழுக்குடன்.. கிழிந்த உடைகளுடன்
பைத்தியம் பிடித்த ஒரு பெண்ணை நிறைமாத கர்பிணியாக பார்த்து இருக்கின்றேன்..! புனைவினை விட நிஜம் கொடூரமானது...!
//துரோகங்களையும் நிராகரிப்புகளையும் தாங்கும் இதயம் எல்லா மனிதர்களுக்கும் இருப்பதில்லை அந்த அதிர்ச்சி தான் இப்படி ஜெயாக்களை உருவாக்க காரணமோ..//
:((((
எங்க ஊர்ல பேபி அக்கான்னு ஒருத்தங்க எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து இருந்தாங்க.. அப்புறம் நாங்கல்லாம் இடம் பெயர்ந்தப்போ ஷெல் வீச்சுல இறந்துட்டாங்க.. ஆனா ரொம்ப துப்பரவா இருப்பாங்க..
இடையில ஒருத்தங்க வந்தாங்க.. அவங்க அவ்ளோ அசுத்தமா இருப்பாங்க.. ஜெயா வயசுதான் இருக்கும்.. அவங்க கர்ப்பமானது தான் பெரிய கொடுமை.. அதே இடப்பெயர்வில அவங்க குழந்தை என்னாச்சு.. அவங்க என்ன ஆனாங்கன்னு தெரியலை..
எதுவும் சொல்ல இல்லை தமிழ்.மென்மையான மனங்களால் துரோகங்களைத் தாங்கிக்கொள்ளமுடிவதில்லை !
Post a Comment